திருட்டு 136 - சரியா தவறா
பல மனிதர்களுக்கு
வாழ்க்கைப் பரிட்சை
நடத்தினாராம்
கடவுள்
வினாத்தாள்களைத் திருத்தும்படி
என்னிடம் கேட்டார்
அவருக்கு
வேலைப்பளு அதிகம் போலும்
திருத்திக் கொடுத்தேன்
ஒரே பார்வையில்
மதிப்பாய்வு செய்தார்
பளீர் என அறைந்தார்
என் கன்னத்தில்
அய்யோ கடவுளே !
என அலறியபடி
என்ன தவறு இழைத்தேன்
என்று கேட்டேன்
“கீழ்க்கண்ட வாக்கியம்
சரியா தவறா
அறிவு அழகு
அறிவின்மை இழிவு “
மேற்கூறிய கேள்விக்கு
சரி என
பதிலளித்த அத்தனை அறிவாளிகளுக்கும்
முழு மதிப்பெண் அளித்திருந்தேன்
ஓர பார்வையால்
கண் காட்டினார்
பக்கத்தில் ஒரு குழந்தை
மொழி அறிவின்றி
இலக்கண அறிவின்றி
எழுத்துக்களை இஷ்டத்திற்கு
ஆட்டிப் படைத்துப்
பேசிக்கொண்டிருந்தது
அழகாய் !

Comments
Post a Comment