திருட்டு 107 - பதில் சொல்ல முடியவில்லை




எண்ணக்  கதவுகளை

யாரோ தட்டிய சத்தம்

எட்டிப் பார்த்தேன்

இரு காதுகள்

கேட்டன

அழுகை சத்தம் எங்கே ?

பொக்கை வாய் மொக்கை எங்கே ?

பதில் சொல்ல முடியவில்லை

கதவை மூடி

தலை சாய்த்தேன்


எண்ணக்  கதவுகளை

யாரோ தட்டிய சத்தம்

எட்டிப் பார்த்தேன்

இரு கண்கள்

கேட்டன

கொக்கிப்  போட்டு இழுக்கும்

பார்வை எங்கே ?

அழகை உருட்டி வைத்து

பார்த்துக்கொண்டிருந்தேனே ,

அந்தக் காட்சி எங்கே ?

பதில் சொல்ல முடியவில்லை

கதவை மூடி

தலை சாய்த்தேன்


எண்ணக்  கதவுகளை

யாரோ தட்டிய சத்தம்

எட்டிப் பார்த்தேன்

இருகைகள்

கேட்டன

அணைத்து வைத்திருந்த

அரும்பு மலர் எங்கே ?

பிடித்து வைத்திருந்த

பிஞ்சுச் சுடர் எங்கே ?

பதில் சொல்ல முடியவில்லை

கதவை மூடி

தலை சாய்த்தேன்


எண்ணக்  கதவுகளை

யாரோ தட்டிய சத்தம்

எட்டிப் பார்த்தேன்

ஒரு மூக்குக்

கேட்டது

மயக்கும் மூத்திர வாடை எங்கே ?

இழுக்கும் பால் மணம் எங்கே ?

பதில் சொல்ல முடியவில்லை

கதவை மூடி

தலை சாய்த்தேன்



எண்ணக்  கதவுகளை

யாரோ தட்டிய சத்தம்

எட்டிப் பார்த்தேன்

இரு உதடுகள் 

கேட்டன 

முத்தம் செய்த 

பிஞ்சு விரல்கள் எங்கே ?

பஞ்சுக் கன்னங்கள் எங்கே ?

பதில் சொல்ல முடியவில்லை 

கதவை மூடி 

தலை சாய்த்தேன் 


எண்ணக்  கதவுகளை

யாரோ தட்டிய சத்தம்

எட்டிப் பார்த்தேன் 

இரு கால் தொடைகள் 

கேட்டன 

படுத்திருந்த பருத்திக் குட்டி 

எங்கே ?

பதில் சொல்ல முடியவில்லை 

கதவை மூடி 

தலை சாய்த்தேன் 



எண்ணக்  கதவுகளை

யாரோ தட்டிய சத்தம்

எட்டிப் பார்த்தேன் 

யாரும் இல்லை 

எண்ணம் கேட்டது 

கற்பனையையும் கவிதையையும் 

கொட்டிய குழந்தை எங்கே ?

பதில் சொல்ல முடியவில்லை 

கதவை மூடி 

தலை சாய்த்தேன் !


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !