திருட்டு 85 - ஸ்ருதி சரியில்லை !
வறுமைக்கோடாய்
நிற்கிறது மேம்பாலம்
மேலே வாகனம் ஓட்டுவோர்
கோட்டிற்கு மேல் !
கீழே வறுமைக்குப் பிறந்தோர்
கோட்டிற்குக் கீழ் !
மேலே
அவசர வாழ்க்கையின்
விளம்பரமாய்
வாகனங்களின் இரைச்சல் !
கீழே
புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையின்
விளம்பரமாய்
மனித உயிர்கள் !
மேலே
தத்தம் வீடுகளுக்கு விரைகிறார்கள் !
கீழே
வீதியே தத்தம் வீடாக வரைகிறார்கள் !
இப்படி
மேலும் கீழும்
தாளம் போடுகிறது
முதலாளித்துவம் !
ஸ்ருதி தான் சரியில்லை !

Comments
Post a Comment