திருட்டு 73 - விஞ்ஞானிகளுக்கு ஒரு வேண்டுகோள்
'செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா'
இளையராஜா
இசையில் பேச
ஜேசுதாஸ்
குரலில் இசைக்க
எப் எம் ரேடியோ
காதுகளை நெருட
நண்பர்களோடு
அரட்டை அடித்து
இரவினைப் பகலாக்கி
தேநீர் அருந்திய இரவுகள்!
ஒரே தட்டில்
நாய்கள் கூட
முகம் சுளிக்கும் வண்ணம்
தெரிந்தவர் தெரியாதவரோடு
சாப்பிட்ட
விடுதி உணவு !
அடுத்த நாள்
நடக்கும் தேர்வை
முந்திய நாள்
மட்டுமே மதித்து
பாடநூலின்
அச்சு நகல்களைக் கூட
கடன் வாங்கி
படித்துக் கிழித்து
தேர்ந்த
செமஸ்டர் தேர்வுகள் !
இன்று ஏ டி எம் வரிசையில்
நிற்க
மறுக்கும் கால்கள்
அன்று
கக்கா போகக் கூட
பக்காவாக நின்ற தருணங்கள் !
இரவை
பகலாக்கும்
மொக்கைகள் !
பகலை
இரவாக்கும்
தூக்கங்கள் !
இதயத்தில்
இருந்து மட்டுமே
பூத்த
நட்புகள் !
உள்ளத்தில்
இருந்து மட்டுமே
உதித்தப்
பேச்சுக்கள் !
கல்லூரி நினைவுகள் !
இனி
கனவிலும்
சாத்தியப்படாத
நிகழ்வுகள் !
விஞ்ஞானிகளே!
சீக்கிரம்
காலப் பயணம்
செய்வதெப்படி என
கண்டுபிடியுங்கள் !
தேநீர் வாங்கித் தருகிறேன் !
இளையராஜா இசையும்
ஜேசுதாஸ் குரலும்
இலவச இணைப்பாக !

Comments
Post a Comment