திருட்டு 98 - அப்பா !


அன்று !

திண்ணையில்

அமர்ந்து

அம்மையும்

நானும்

தம்பியும்

காத்திருப்போம்

நிஜாம் பாக்கு

பையில்

வீட்டு ஜமான்களை

வாங்கிக்கொண்டு

சைக்கிளில்

வரும்

உங்களை எதிர்பார்த்து !


பேய்கள்

உறங்கப் போனபின்பும்

பெட்டிக் கடையில்

சளைக்காமல்

வேலைப் பார்த்து

குட்டிக்  குட்டியாய்

சேமித்து

குட்டிக் குடும்பம்

சமைத்தீர்கள் !

விடுப்பு எடுக்காமல்

உழைத்து

எங்களை

வளர்த்தீர்கள் !


கல்வி

ஒன்றே

நடுத்தர வர்க்கம்

ஏறுவதற்கான

ஒரே ஏணி

என்று

எங்களைக்

கட்டுக்கோப்பாய்க்

காத்தீர்கள் !

ஒழுக்கத்தில்

தேய்த்து

எடுத்தீர்கள் !

கல்வி

ஏணியில்

ஏற்றிவிட்டிர்கள் !

ஏறிவிட்டோம் !


உங்கள்

இளமையைக்

குடும்பத்திற்காகத்

தியாகம்

செய்த

நீங்களும்

தியாகிதான் !

குடும்பத்தை

இயக்கிய

தலைவர்தான் !



ஒவ்வொரு

இரவும்

சாமம் கடந்து

வீடு சேரும் நேரம்

உங்கள்

சைக்கிள் ஸ்டான்ட்

சத்தம்

என்னை

எழுப்பிவிடும்

தூங்காமல்

தூங்குவேன் !

தம்பி

நெற்றியிலும்

என்

நெற்றியிலும்

புனித எண்ணெய்

தேய்த்துவிட்டே

தூங்குவீர்கள்  !


சமூகத்துக்காகத்

தான்

மனிதன்

என்ற

உங்கள்

கோட்பாடும்

மனிதனுக்காகத்தான்

சமூகம்

என்ற

எங்களின்

இந்தத்

தலைமுறையின்

கோட்பாடும்

முட்டிக்கொள்ளும்

போது

சத்தம் தான் !


சத்தத்தை

அடக்கப்

பேத்தி

வந்திருக்கிறாள் !

அப்பா !

இனி

தாத்தாவாக

மாறுங்கள் !

குழந்தை வேடம்

பூணுங்கள் !


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !