Posts

Showing posts from 2017

திருட்டு 111 - தண்ணீர் முத்துக்கள்

Image
நேற்று இரவு காதல் வெறியில் தன்  மேக வீட்டை விட்டு பூமி நோக்கி ஓடி வந்தான் மழை முரடன் பச்சிலைகளை கர்ப்பிணி ஆக்கினான் பிறந்தன தண்ணீர் முத்துக்கள் !

திருட்டு 110 - அழகின் தந்திரம்

Image
அழகு தன் தற்காப்பிற்காய் கற்றுக்கொண்டதோ இந்த கைக்குழந்தை கராத்தே !

திருட்டு 109 - காற்றின் நோக்கம்

Image
காற்று வீசுகிறது துணி அசைகிறது கைக்குழந்தையின் சிரிப்பு

திருட்டு 108 - இளமை ஓ இளமை !

Image
அரும்பு மலராய் நம்பிக்கையுடன் ! புது வாழ்க்கை செதுக்க ஆசையுடன் ஆயிரம் கற்பனைகள் ஆயிரம் சாத்தியங்கள் கனவுகள் இன்னும் அடிமைகள் உணர்வுகள் இன்னும் தலைவர்கள் இளமை ஓ இளமை உன்னில் நடனமாடும் புதுமை அரும்பு மலராய் நீ அழகாய் காத்திருக்கிறாய் இழக்கும் முன் பறந்துவிடு விலகும் முன் ருசித்திவிடு இளமை ஓ இளமை சாகும் வரை என்னை அணைத்திடு !

திருட்டு 107 - பதில் சொல்ல முடியவில்லை

Image
எண்ணக்  கதவுகளை யாரோ தட்டிய சத்தம் எட்டிப் பார்த்தேன் இரு காதுகள் கேட்டன அழுகை சத்தம் எங்கே ? பொக்கை வாய் மொக்கை எங்கே ? பதில் சொல்ல முடியவில்லை கதவை மூடி தலை சாய்த்தேன் எண்ணக்  கதவுகளை யாரோ தட்டிய சத்தம் எட்டிப் பார்த்தேன் இரு கண்கள் கேட்டன கொக்கிப்  போட்டு இழுக்கும் பார்வை எங்கே ? அழகை உருட்டி வைத்து பார்த்துக்கொண்டிருந்தேனே , அந்தக் காட்சி எங்கே ? பதில் சொல்ல முடியவில்லை கதவை மூடி தலை சாய்த்தேன் எண்ணக்  கதவுகளை யாரோ தட்டிய சத்தம் எட்டிப் பார்த்தேன் இருகைகள் கேட்டன அணைத்து வைத்திருந்த அரும்பு மலர் எங்கே ? பிடித்து வைத்திருந்த பிஞ்சுச் சுடர் எங்கே ? பதில் சொல்ல முடியவில்லை கதவை மூடி தலை சாய்த்தேன் எண்ணக்  கதவுகளை யாரோ தட்டிய சத்தம் எட்டிப் பார்த்தேன் ஒரு மூக்குக் கேட்டது மயக்கும் மூத்திர வாடை எங்கே ? இழுக்கும் பால் மணம் எங்கே ? பதில் சொல்ல முடியவில்லை கதவை மூடி தலை சாய்த்தேன் எண்ணக்  கதவுகளை யாரோ தட்டிய சத்தம் எட்டிப் பார்த்தேன்

திருட்டு 106 - கற்பனை கிள்ளி !

Image
எது வரைத்  தொடரும்  அறியேன் நான் ! வரும் வரை  வாழ்வை  ருசிப்பேன் நான் ! சுடும் வரை  நெருப்பை  அணைப்பேன் நான் ! அலையென        அலையென  தடை           தடுத்தாலும்  மலையென           மலையென  எழுவேன் நான் ! ஒரு நாள்  வருமே          முற்றுப்புள்ளி  அதுவரை   வரைவேன்         கற்பனை கிள்ளி !

திருட்டு 105 - மடி !

Image
அப்பா மடி  அம்மா மடி  யார் மடி  வேண்டுமடி  தோணும்படி  தூங்கும்படி  கூறுகிறேன் நீ கேட்கும்படி ! தூக்கமடி  தூக்கமடி  இரவு பகல் தொலைக்கும் தூக்கமடி  வேண்டுமடி  வேண்டுமடி  உன் தூக்கத்தில் ஒரு  பிடி ! முத்தமடி முத்தமடி நான் கேட்டதெல்லாம் முத்தமடி மூத்திரமடி மூத்திரமடி என்றோ உன் காதில் வந்து விழுந்துதடி என் ஆடையெல்லாம் மூத்திரமடி !

திருட்டு 104 - அரசி !

Image
கழுத்து நிற்கவில்லை  முதுகு நிமிரவில்லை  கால்கள் நடக்கவில்லை  வாயும் பேசவில்லை  இருந்தும்  ஆட்சி  மட்டும் உன் கையில் !

திருட்டு 103 - பழிக்குப் பழி !

Image
பட உரிமை : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  சரக்குக் கிடைக்காததால் ஜாதி மாறச் சொன்னான்  ! நான் உள்வாங்கினேன்!       - அண்ணா சாலை .

திருட்டு 102 - எல்லாரும் வாங்க !

Image
அம்மா வாங்க அப்பா வாங்க தாத்தா வாங்க பாட்டி வாங்க மாமா வாங்க அத்த வாங்க ஊரே வாங்க உலகே வாங்க மோடி வாங்க டிரம்ப் வாங்க ரஜினி வாங்க டாம் க்ரூஸ் வாங்க யானை வாங்க பூனை வாங்க எறும்பே வாங்க கரும்பே வாங்க நெருப்பு வாங்க தண்ணீர் வாங்க எல்லாரும் வாங்க ! நான் ஆய் போயிட்டேன் !

திருட்டு 101 - மஞ்சள் வெயிலே !

Image
நேற்றை போல் இன்றில்லை ! மயக்கும் மஞ்சள் வெயிலின் மௌனமும் மௌனத்திற்கு ஸ்ருதி சேர்க்கும் காக்கையின் சத்தமும் நேற்றைய நினைவுகளை திரையிடுகின்றன ! இன்றைய வாழ்க்கை நிச்சயம் நேற்றைய நிகழ்வுகளின் தொடர் அல்ல ! எத்தனை மாற்றங்கள் ! சில நேரங்களில் நேற்றைய நேரங்களை விரும்புகிறேன் ! யாரோ ஒருவர்  வாழ்க்கையின் நிகழ்வுகளாய் அவை நினைவுத் திரையில் தெரிகின்றன ! இந்த மஞ்சள் வெயிலின் இதம் நேற்று என் வாழ்விற்கு இதம் கொடுத்த நிகழ்வுகளைத் திரையிடுகின்றது ! மனம் இளகுகிறது! காக்கையின் கரைதலுக்கு வணங்குகிறது! எதையோ இழந்தது போல் ஒரு மெல்லிய சோக இழையும் தெரிகிறது அந்த  இதங்களுக்கு நடுவில் ! என்னுடைய இந்த வாழ்க்கையின் கதையில் நேற்றை போன்ற சுகமான தருணங்கள் இனி கிடையாதோ எனத் தோன்றுகிறது ! மஞ்சள் வெயிலே எதாவது பேசேன் ! தன்னந்தனியே உளறிக்கொண்டிருக்கிறேன் !

திருட்டு 100 - நிறைவேற்றம்

Image
ஒரு எண்ணம் சிறகு விரித்தது ! நூறு கவிதைகளாய் இன்று முதுமை அடைந்தது ! அந்த எண்ணத்திற்கு நன்றி ! ஒரு பார்வை என் குளத்தில் கல் எரிந்தது ! கல் தொட்டதும் குளத்தில் கவி அலைகள் திரண்டன ! வைரமுத்துவுக்கு நன்றி ! ஒரு உறவு என் கவிதைகளைப் பதம் பார்த்துத் தட்டிக் கொடுத்தது ! கவிதைகள் தன்னம்பிக்கைக் கொள்ளச் செய்தது ! என் துணைவிக்கு நன்றி ! ஒரு கலா தேவி என் பன்முக உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தாள் ! கவிதைகள் அள்ள அட்சய பாத்திரம் தந்தாள் ! கவிதா தேவிக்கு நன்றி ! ஒரு தாய் என் திருட்டுக்குக் கை கொடுத்தாள் ! தன் மடியில் என் திருட்டுப் பொருட்களை ஏந்தினாள் ! தமிழுக்கு நன்றி ! என் திருட்டில் அவளுக்குப் பங்களிப்பதாக வாக்களித்தேன் ! தமிழ்த் தாயே ! இந்த நூறாம் கவிதை உனக்கே ! நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான் கவிஞன் இந்தக் கவித்திருடன்! என் திருட்டை ரசித்த மனங்களுக்கு நன்றி ! என் முதல் பயணம் நிறைவேறியது ! மீண்டும்

திருட்டு 99 - தம்பி !

Image
நினைக்கவில்லை கவிதை எழுதுவேன் என உனக்கு ! என் ஈகோ சட்டையைக் கழற்றிவிட்டு நம் உறவுச் செடிக்குத் தண்ணீராக இக்கவிதை ! அன்று ! ஆசை மிட்டாய் திருடினாய் என்று அம்மாவிடம் சாட்சி சொன்னேன் ! கவிதை எழுத நினைவுக் கிடங்கை தேடிப் பார்த்ததில் இதைக் கண்டேன் ! காட்டிக் கொடுத்த குற்ற உணர்ச்சி அந்த நினைவுக்கு காவல் செய்கிறது இன்னும் ! அப்பாவின் ஆணையில் பள்ளி செல்வோம் தினமும் குட்டை சைக்கிளில் நீ முன்னே ! பாதுகாவலாக நெட்டை சைக்கிளில் நான் பின்னே ! மாவட்டத்தில் முதல் மாணவனாக நீ தேர்வானபோது நானே வென்றது போல் உணர்ந்தேன் ! இரு வேறு துருவங்களாய் நீயும் நானும் இன்று ! இறுக்கமான நேரங்கள் சிலவும் உண்டு ! இருந்தாலும் செல்வோம் ! தோள்பிடித்து ! வாழ்க்கையின் முட்டுச்சந்து வரை ! வாழ்க்கை உனக்கு ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்கள் நானறியேன் ! எதுவென்றாலும் தளராதிருப்பாய் அதை மட்டும் அறிவேன் ! வருடங்கள் பல கண்டுவிட்டோம் ஒன்றாய்! அடங்காது அத்தனையும்

திருட்டு 98 - அப்பா !

Image
அன்று ! திண்ணையில் அமர்ந்து அம்மையும் நானும் தம்பியும் காத்திருப்போம் நிஜாம் பாக்கு பையில் வீட்டு ஜமான்களை வாங்கிக்கொண்டு சைக்கிளில் வரும் உங்களை எதிர்பார்த்து ! பேய்கள் உறங்கப் போனபின்பும் பெட்டிக் கடையில் சளைக்காமல் வேலைப் பார்த்து குட்டிக்  குட்டியாய் சேமித்து குட்டிக் குடும்பம் சமைத்தீர்கள் ! விடுப்பு எடுக்காமல் உழைத்து எங்களை வளர்த்தீர்கள் ! கல்வி ஒன்றே நடுத்தர வர்க்கம் ஏறுவதற்கான ஒரே ஏணி என்று எங்களைக் கட்டுக்கோப்பாய்க் காத்தீர்கள் ! ஒழுக்கத்தில் தேய்த்து எடுத்தீர்கள் ! கல்வி ஏணியில் ஏற்றிவிட்டிர்கள் ! ஏறிவிட்டோம் ! உங்கள் இளமையைக் குடும்பத்திற்காகத் தியாகம் செய்த நீங்களும் தியாகிதான் ! குடும்பத்தை இயக்கிய தலைவர்தான் ! ஒவ்வொரு இரவும் சாமம் கடந்து வீடு சேரும் நேரம் உங்கள் சைக்கிள் ஸ்டான்ட் சத்தம் என்னை எழுப்பிவிடும் தூங்காமல் தூங்குவேன் ! தம்பி நெற்றியிலும் என் நெற்றியிலும் புனித எண்ணெய் தேய்த்துவிட்டே தூங்குவீர்கள்  ! சமூகத்துக்

திருட்டு 97 - ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவு

Image
புயல் கூட புறப்படும் ஒரு பட்டாம்பூச்சியின்  சிறகசைவில் ! வாழ்க்கையே திசை மாறும் பெண் பார்வையின் ஆழ்குழியில் ! பிரசவ வலியும் மறந்து போகும் தன் குழந்தையின் தரிசனத்தில் ! பேராட்சியும் கவிழ்ந்து போகும் ஒரு குடிமகனின் வாக்கினில் ! வரலாறும் முதுகொடியும் ஒரு சித்தாந்தத்தின் அறிமுகத்தில் ! பெருங்காடும் தீய்ந்து போகும் ஒரு தீப்பொறியின் பிறப்பினில் ! அட ! நான் கூட கவிஞன் ஆவேன் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவில் !

திருட்டு 96 - அப்பாவானேன் !

Image
காதல் மூன்றெழுத்தும் காமம் மூன்றெழுத்தும் இணைந்துத் தந்த மூன்றெழுத்து ரியானா ! அப்பா மூன்றெழுத்து அம்மா மூன்றெழுத்து தாத்தா மூன்றெழுத்து பாட்டி மூன்றெழுத்து என மூன்றெழுத்து பதவிகள் அணிவித்தவள் ரியானா ! வருடத்தின் மூன்றாம் மாதம் மாதத்தின் மூன்றாம் நாள் என மூன்றிலே பிறந்த மூன்றெழுத்து ரியானா ! மூன்றெழுத்து மருத்துவர் ஷோபனா எடுத்துக் கொடுத்த மூன்றெழுத்து முத்து ரியானா ! மூன்றை மூன்றால் பெருக்கி ஒன்பதாய் பார்த்தறிந்து ஒன்பதாம் மணியில் பிறந்தவள் ரியானா ! கருவறையில் இருந்து கொண்டே பிரசவம் பார்க்க செல்லும் போது மூன்றாம் எண்ணில் முடியும் வண்டியைத் தேர்ந்தெடுத்தவள் ரியானா ! மூன்றெழுத்து மகள் உறவைத் தன் பெற்றோருக்கு அளித்த மூன்றெழுத்து பாப்பா ரியானா ! கவிதை மூன்றெழுத்து ! என் கவிதையும் மூன்றெழுத்து ! இந்தக் கவிதையால் என் மூன்றெழுத்துக் கவிதையை உலகிற்கு அறிமுகம் செய்கிறேன் !

திருட்டு 95 - வாழ்க்கையோடு விளையாடு !

Image
கருவறை மர்மங்கள் உடையும் நாள் ! மூன்றாம் மாதம் மூன்றாம் நாள் மூன்றாம் நபர் என் இல்லத்தில் இணையும் நாள் ! வரும் முதல் நொடியிலேயே பலருக்குப் பதவிப்பிரமாணம் செய்யும் நாள் ! அப்பாவாக அம்மாவாக தாத்தாவாக பாட்டியாக சித்தப்பாவாக பெரியம்மாவாக அழுகை இசையின் பின்னணியோடு ஒரு வாழ்க்கை தொடங்கும் நாள் ! என் வித்தை சுமந்து செல்லும் பொறுப்பை ஏற்கும் நாள் ! எங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்றும் நாள் ! இந்நாள் அந்நாள் உயிரே ! வரவேற்கிறோம் ! பாசக் கம்பளம் விரித்து மகிழ்ச்சித் திரவியம் தெளித்து அக்கறை ஆடை உடுத்தி உற்சாகக் கெட்டி மேளம் தட்டி வரவேற்கிறோம் ! இனி இந்த உலகம் உன் கையில் ! வா ! வாழ்க்கையோடு விளையாடு !

திருட்டு 94 - கவிதை ஒலி !

Image
ஒலி சிறகின்றி ஊனமாய் நின்றது . தன் தொண்டைக் குழியில் ஊற்றிக் குழைத்து மொழி சமைத்தான் மனித மிருகம் ! ஒலியைச் செதுக்கினான் ! மூளைகளின் தூதுவனாய் ஒலி பதவி ஏற்றது ! மொழி ஆடை உடுத்திக்கொண்டது ! ஒரு நாள் காலத்தைக் கடக்கும் ஆசை கொண்டது மொழி ! தொழில்நுட்பத்தின் தோள் சாய்ந்து எழுத்தாய் படுத்துக் கொண்டது ! காலத்தை வென்றது ! மொழியின் வாழ்வில் ஒரு வினோத பிரச்சினை .. மூளைக்கு மட்டும் தான் தூது செய்வாயா என இதயம் உணர்வுகளைக் கொட்டி விண்ணப்பம் செய்தது ! பிறந்தது கவிதை ! ஒலி இரட்டைப்  பதவியேற்பு ஏற்றுக்கொண்டது ! மொழிக்கு மேல் கவிதை மேலாடை உடுத்திக் கொண்டது ! ஒலியால் உருவான கவி தன் திறத்தால் தனக்கென செதுக்கிக் கொண்டது இன்னொரு ஒலி கவிதை ஒலி ! கேட்கிறதா அந்தக் கவிதை ஒலி ?

திருட்டு 93 - கதை கவிதை

Image
கதை கேளு! கதை கேளு! கதையோட கதை கேளு! கதையின்றி வாழ்வில்லை! கதையில்லா மனிதனில்லை! முடிந்தக் கதை வரலாறு நடக்கும் கதை வாழ்க்கை முடியா கதை ஏமாற்றம் புரியா கதை மர்மம் கதைச் செத்தால் மதம் சாகும் மதம் சொல்லும் கதை கேளு! கதைச் செத்தால் தேசம் சாகும் தேசம் சொல்லும் கதை கேளு! கதைக் செத்தால் உணர்வு சாகும் மனம் சொல்லும் கதை கேளு! அன்றாட வாழ்க்கை  வாழ செய்தி சொல்லும் கதை கேளு! அன்பான வாழ்க்கை  வாழ உறவு சொல்லும் கதை கேளு! இளமையான வாழ்க்கை வாழ குழந்தை சொல்லும் கதை கேளு! சோர்வுற்ற நெஞ்சமே உற்சாகக் கதை கேளு! பெருமை கொண்ட கர்வமே எளியோனின் கதை கேளு! அடிபட்ட உள்ளமே ஞானத்தின் கதை கேளு! கதை கேளு! கதை கேளு! கதையோட கதை கேளு! கதையின்றி இக்கவிதை இல்லை! அதையும் கேளு !

திருட்டு 92 - நட்பை முறித்துக்கொள்வோம்!

Image
மூளை ஓரங்களில் கூடாரம் போட்டு என் உள்ளத்தில் போராட்டம் நடத்தும் எண்ணங்களே! உங்கள் கனம் தாங்காமல் என் உடலும் சோர்வுறுகிறது முகத்தின் மலர்ச்சி விடுப்பு  எடுத்து வெளியூர் செல்கிறது உங்களுக்குள் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்று அவைகளையும் போராட்டத்திற்கு அழைக்கிறீர்கள்! என்ன நியாயம் இது ! நான் அஞ்சும் ஒரே எதிரி நீங்கள் தான் என்னால் வெல்ல முடியாத எதிரி என் சக்திற்கு அப்பாற்பட்ட எதிரி நீங்கள் சொல்லும் கதைகள் உண்மையா? கட்டுக்கதைகளா? பிரித்தறியும் ஞானம் இல்லை எனக்கு என்னை விட்டுவிடுங்கள் கூடாரத்தைக் கலைத்துவிடுங்கள் நம் நட்பை முறித்துக்கொள்வோம்!

திருட்டு 91 - பயணக் களைப்பு

Image
இயற்கை சுதாகரித்துக் கொண்டது கவிதைகளைப்  பத்திரமாகத் தன் அக்குளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறது தேடித்  தேடிப் பார்க்கிறேன் கவிதை கிடைத்தப்  பாடில்லை மூளை முடுக்குகளில் பார்த்துவிட்டேன் மூலை முடுக்குகளிலும் தேடிவிட்டேன் கவிதா தேவி கருணைப் புரிவதாய்த் தெரியவில்லை இத்தனை தூரம் ஓடி வந்துவிட்டேன் இன்னும் பத்துக்  கவிதைகளில் என் பயணம் நிறைவுறும் சற்றுத்  தடுமாற்றம் தெரிகிறது முதன் முறை கணிணியின் திரையை வெறித்துப்  பார்க்கிறேன் வெறுத்துப் பார்க்கிறேன் கவிதா தேவியே ஏன் இந்த சோதனை ? என்னுடன் ஓடி வந்த பயணக் களைப்போ ?

திருட்டு 90 - அம்மா !

Image
அம்மா ! வழுக்கம்பாறையில் கிராமத்து வாசனையோடு பிறந்தவரே ! நீங்கள் அளித்த பிறவிக் கடனை அடைக்க முடியாத கடன்காரன் நான் ! கடனுக்குப் பதில் இந்தக் கவிதையைக் காணிக்கையாய்  அளிக்கிறேன் ! சற்றும் ஈடாகாது இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள் ! தாய்ப்பால் குடிக்க மறுத்தேன் உங்கள் பாசப்பால் குடித்துப்  பசி அடங்கியதால் ! சிக்கலானச் சூழலும் உங்கள் புன்னகையை வென்றதில்லை !  சிரியுங்கள் நிறைய சிரியுங்கள் ! எனக்கு ஊட்டச்சத்து உங்கள் சிரிப்பு ! ஆங்கிலத்தில் நீங்கள் அடுக்கிவைக்கும் அழகு மொழிகள் என் ஆன்மாவிடம் கைகுலுக்கும் அமுத மொழிகள் ! கூட்டுக் குடும்பம் கட்டிவைத்தச் சிறையில் குடும்பக் கூட்டைக் காத்தத் துணைவி நீங்கள் ! தன் சுகம் துறந்தத் துறவி! உங்கள் எளிமைக்குள் ஒளிந்திருக்கும் மனதைரியத்தை வியக்கிறேன் ! என் உடலும் உள்ளமும் நலம்தானா என மணித்துளி ஒவ்வொன்றும்  நினைக்கும் அக்கறைத் தெய்வமே ! வாழ்க்கையை நீங்கள் படிக்கும் முறையை ரசிக்கிறேன் !  முதுமை மீது எனக்குக் கோபம் உங்கள் இளமையை அது பறிப்பதால் ! பரவாயில

திருட்டு 89 - ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !

Image
இரவு நேர பந்த் இமைக் கதவுகளை மூடச் சொல்லி மிரட்டுகிறாள் நித்திரா தேவி ! இன்றைக்கான கவிதை முனைய நேரம் கேட்கிறாள் கவிதா தேவி ! இரு தேவிகளுக்கிடையே யுத்தம் ! நித்திரா தேவி வென்றாள் ! தூங்கிவிட்டேன் ! கவிதா தேவி புன்னகைத்தாள் !

திருட்டு 88 - வார்த்தை விக்கல்

Image
சில நேரங்களில் சில மனிதர்களிடம் சில வார்த்தைகள் கூட வர மறுக்கின்றன மீறிச்  சொன்னால் செயற்கை முகம் அணிகின்றன தட்கல் முறையிலாவது 'டிக்கெட்' எடுத்து வார்த்தைகளை  வரவழைக்க வேண்டும் இந்த வார்த்தை விக்கலைத் தடுக்க !

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

Image
மரணம் ஒரு ஊமைக் குசும்பன் ! சொல்லாமல் கொள்ளாமல் உயிரை வெல்லாமல் போகாதக் கொடூரக் குசும்பன்! கடவுளைக் கண்டு பயமில்லை எனக்கு நாத்திகம் சுவாசிப்பதால் ! மரணத்தைப் பார்த்தோ தினம் அஞ்சுகிறேன் ! காற்றைச் சுவாசிப்பதால் ! எந்நேரமும் குசும்பன் அதைப்பறிக்க முனைவான் என்பதால் ! என் வாழ்வின் கடன் நிமிடங்கள் வெட்டியாக வெட்டியானுக்கு இரையாகும் என்று அஞ்சுகிறேன் ! இந்தக்  குட்டி வாழ்க்கையில் வெட்டி நிமிடங்களை வெறுக்கிறேன் கவிதையாய் அதைச்  செதுக்க முனைகிறேன் மரணம் ஒரு ஊமைக் குசும்பன் ! என்னையும் கவிதை எழுத வைத்துவிட்டான் !

திருட்டு 86 - இதை மட்டும் செய்ய முடியாது !

Image
செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பலாம் நிலவில் கால் வைக்கலாம் அறிவியலால் உலகை உலுக்கலாம் தொழில்நுட்பம் கொண்டு மாயம் செய்யலாம் காதலிக்கலாம் கொலை செய்யலாம் திருடலாம் பேசலாம் பாடலாம் எதையோ நினைக்கலாம் சித்தாந்தம் உருவாக்கலாம் கலை படைக்கலாம் உண்ணலாம் உறங்கலாம் உடுத்தலாம் நடக்கலாம் மொக்கை போடலாம் தவம் செய்யலாம் வாழலாம் சாகலாம் கவிதை எழுதலாம் இந்த கவிதையைப் படிக்கலாம் உதவாக்  கவிதை எனக் காரி உமிழலாம் ஆனால் சும்மா மட்டும் இருக்க  முடியாது மனிதனால் !

திருட்டு 85 - ஸ்ருதி சரியில்லை !

Image
வறுமைக்கோடாய் நிற்கிறது மேம்பாலம் மேலே வாகனம் ஓட்டுவோர்                          கோட்டிற்கு  மேல் ! கீழே வறுமைக்குப் பிறந்தோர்                             கோட்டிற்குக்  கீழ் ! மேலே அவசர வாழ்க்கையின் விளம்பரமாய் வாகனங்களின் இரைச்சல் ! கீழே புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையின் விளம்பரமாய் மனித உயிர்கள் ! மேலே தத்தம் வீடுகளுக்கு விரைகிறார்கள் ! கீழே வீதியே தத்தம் வீடாக வரைகிறார்கள் ! இப்படி  மேலும் கீழும்  தாளம் போடுகிறது  முதலாளித்துவம் ! ஸ்ருதி தான் சரியில்லை !

திருட்டு 84 - யார் சொல்வதைக் கேட்க?

Image
காலப் புத்தகத்தில் முதல் பக்கம் : யார் சொல்வதைக் கேட்க? கற்கால மனிதன் நான் ! என் ஐம்பொறிகளின் பேச்சைக் கேட்பேன்! காலப் புத்தகத்தில் பல பக்கங்கள் கழித்து : யார் சொல்வதைக் கேட்க? விவசாயம் பிறந்ததும் பிறந்தவன் நான் ! கடவுள் சொல்வதைக் கேட்பேன்! காலப் புத்தகத்தில் இன்னும் பலப் பக்கங்கள் கழித்து : யார் சொல்வதைக் கேட்க ? அரசனின் ஆணைக்கு அஞ்சுபவன் நான்! அரசனின் கட்டளையைக் கேட்பேன்! காலப் புத்தகத்தில் இன்றையப்  பக்கம் : யார் சொல்வதைக் கேட்க ? மக்களாட்சியின் மடியில் பிறந்தவன் நான்! என் உணர்வுகளின் பேச்சைக் கேட்பேன்! காலப் புத்தகத்தில் இன்னும் எழுதப்படாதப் பக்கம் : யார் சொல்வதைக் கேட்க? இணைய வளர்ச்சியின் மகுடத்தில் உதித்தவன் நான் ! இணைய ரத்தத்தில் ஓடும் BIG DATA உண்ணும் ALGORITHMS சொல்வதைக் கேட்பேன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !

Image
தோல்விகளின் தோள்களில் தலைசாய்த்துப்  பழகிவிட்டது மனச்சோர்வின் ஓரங்களில் கிடந்துருண்டு அலுத்துவிட்டது எதிர்பார்ப்புகளின் எதிரிகளை எதிர்த்து நின்று களைத்துவிட்டது மனஇறுக்கத்தின் நெரிசலில் நசுங்கி நின்று வெறுத்துவிட்டது வாழ்வின் வெறுமை வெல்ல சாவில் நிறைவைத் தேடி நடந்தான் நம்பிக்கையின் குரல் கேட்டது 'இன்னொரு முறை வா நட்சத்திரங்கள் சேகரிக்க' என்றது 'தேடிய பொருள் கிடைக்காமல் வாடியது போதும் புது பொருள்கள் நீயே படைப்பாய்' என்றது கண்ணீர்த் துளிகளில் வெளிச்சத்தின் பிரதிபலிப்பு தெரிந்தது தோல்வியின் தோள்களை விலக்கி நம்பிக்கையின் கைகளைப்  பிடித்தான் மனச்சோர்வின் இருளறையில் ஜன்னலைத் திறந்தான் எதிர்பார்ப்பின் எதிரிகளை புன்முறுவலோடு நகைத்தான் முன்னோக்கி நடந்தான்! மனஇறுக்கத்தின் பிடிகளை விலக்கி , நட்சத்திரங்கள் சேகரிக்க !

திருட்டு 82 - அரசியல் அசிங்கம்

Image
ஜெயலலிதா இறந்தார்           இறக்கவில்லை கொல்லப்பட்டாராம் ஓ பி எஸ் ராஜினாமா செய்தார்            செய்யவில்லை கட்டாயப்படுத்தப்பட்டாராம் சசிகலா முதல்வர் ஆக ஆசைப்பட்டார்            ஆசைப்படவில்லை கேட்டுக்கொள்ளப்பட்டாராம் ஓ பி எஸ் உடன் ஜெயலலிதா ஆன்மா பேசினார்              பேசியது  ஜெயலலிதா இல்லை பி ஜே பி ஆம் ஆளுநர் வேலை நிமித்தம் மகாராஷ்டிரா சென்றார்                சென்றது அரசியல் நிமித்தம் வேலை நிமித்தம் இல்லையாம் கூவத்தூரில் அ தி மு க எம் எல் ஏ க்கள் சிறையடைப்பு                 அடைக்கப்படவில்லை அழைக்கப்பட்டார்களாம் சிறை செல்லுமுன் ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் செய்தார்                  சபதமில்லை அரசியல் விளையாட்டாம் சட்டப்பேரவையில் போர்க்களம் - இருக்கைகள் , மைக் சேதம்                   சேதம் செய்யவில்லை ரகசிய வாக்கெடுப்புத்தான் கேட்டார்களாம் அரசியல் அழுக்குத் தெரிகிறது  இந்தக்  கவிதையில்                   அழுக்கு  இல்லை அசிங்கமாம் !

திருட்டு 81 - ஆறாம் பொறி

Image
மெய் வாய் கண் மூக்கு செவி இந்த ஐம்பொறிகளுடன் ஆறாம் பொறியாய் இணைந்தவள் நீ ! ஓட முடியாமல் களைத்துப் போன ஒலி அதிர்வுகளை இடம் விட்டு இடம் ஊர் விட்டு ஊர் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சேர்த்தவள் நீ ! அரசர்களுக்குக் கூட கிடைக்காத சக்திகளை இணையத்தின் இரக்கத்தால் என் கைகளில் தந்தவள் நீ ! என் கைகளுக்குள் அடங்கி விடும் மந்திரக் கோல் நீ ! பேராசை காதலி போல் மனிதர்களின் முகத்தைவிட உன் முகத்தையே அதிகம்   பார்க்கவைத்தவள் நீ !  அடியே ! என் சக்களத்தி ! உன் சேலைக்குள் என்னை  மடக்கி வைத்தது போதும் கொஞ்சம் வெளியே விடேண்டி !

திருட்டு 80 - அற்ப சுகம்

Image
அலுத்துப்போன சூரியன் அந்தியில் சிவந்த முகத்தோடு வீடு திரும்புகையில் அரிதாக நானும் அலுவலகத்தை விட்டுக் கிளம்ப உடலில்    மாலை வெளிச்சம் முட்ட சிவந்த சூரியன் பைக் கண்ணாடியில்                                    சிரிக்க கவிதை பிரசவிக்க சுகம் அற்ப சுகம் அற்புதமான சுகம் கொண்டேன்

திருட்டு 79 - சிரிக்காதவர் சிரித்த போது ...

Image
சலவைத்தூள் என்றால் நிர்மா தலைவலி என்றால் சண்டு பாம் குளிப்பதற்கு ஹமாம் தொலைக்காட்சி  என்றால் ஓனிடா சேனல் என்றால் தூர்தஷன் நாடகம் என்றால்   மந்திரா பேடியின்  சாந்தமான 'சாந்தி' குழந்தைகளுக்கு ஷக்தி மான் முதியவர்களுக்கு தூர்தஷன் செய்திகளும் ஒலியும் ஒளியும் கிரிக்கெட்        அடுத்த வீட்டு ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பது ! வறுமை              பழக்கப்பட்ட அரக்கன் ! அன்றாட வாழ்வு இப்படி நகர ஒரு நாள்  நரசிம்ம ராவ்  மன்மோகன் சிங்கைப்             பார்த்தார்              சிரித்தார்  இந்தியா மாறிவிட்டது !

திருட்டு 78 - நான்

Image
நான் நினைக்கும் 'நான்' நான் விரும்பும் 'நான்' என் மனைவி அறிந்த 'நான்' என் பெற்றோர் அறிந்த 'நான்' என் தம்பி அறிந்த 'நான்' என் நண்பர்கள்  அறிந்த 'நான்' என் சுற்றம் அறிந்த 'நான்' என் அலுவலகம் அறிந்த 'நான்' என் இணைய நண்பர்கள் அறிந்த 'நான்' அத்தனை 'நான்' களும் முழுமையானதல்ல உண்மையில் யார் தான் 'நான்' யாராவாகவும் இருந்துவிட்டுப் போகிறேன் இப்பொழுது கவித்திருடன் நான்

திருட்டு 77 - பெசன்ட் நகர் ஒரு ஞாயிறு காலை

Image
மேகச்  சாளரத்தின் இடைவெளிகளில் தன் கதிர் விரல்கள் நுழைத்து கடலைக் கொஞ்சுகுறான் சூரியன் 'நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் ' நாட்டுப்புறப் பாடல் பாடி பிச்சைக் கேட்கிறான் பிச்சைக்காரன் நடைமேடையில் கால்விரித்தமர்ந்து வசீகரமாக காற்சட்டையில் இளம் பெண்கள் இருவர் நிற்கின்றனர் தேநீர் கடையில் முகம் மலர சிலர் அரட்டை அடிக்கின்றனர் 'அய்யே! புது மீன் தான் பா நூறு ரூபா குடு ' மீன் கடையில் மீன்காரி வியாபாரம் செய்கிறாள் கோழிக் கடையில் தன் கடைசி கொக்கரிப்பைப் பதிக்கின்றன பிராய்லர் கோழிகள் யாரையோ எதிர்பார்ப்பது போல் உற்று நோக்குகின்றது தெரு நாய் இயக்கத்திலும் சத்தத்திலும் வாழ்க்கை நகர மிதிவண்டி மிதித்துக்கொண்டே வாழ்க்கைக் கவிதை கேட்கிறேன்

திருட்டு 76 - முந்திரிக் கொட்டைக் கவிதை

Image
                                                தூங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கவிதையை ரசிக்க முட்டி மோதி என்னைத்  திட்டிக் கொண்டிருக்கின்றன பல கவிதைகள் முதலிடத்திற்காக ! யாருக்கும் இடம் கொடுப்பதாய் இல்லை கவிதை எழுதி என் கவனம் சிதற அனுமதிப்பாய் இல்லை நான் மட்டும் ரசிக்கிறேன் இந்தக்  கவிதையை ! அய்யோ ! ஒரு கவிதை நுழைந்துவிட்டதே ! முந்திரிக் கொட்டைக் கவிதை !

திருட்டு 75 - மௌனம் பேசுகிறது

Image
முன் பின் தெரியாதவர்களின் முன் பின் இடைவெளிகளில் நின்றுகொண்டு உடல் இல்லை உயிர் இல்லை ஆனால் குரல் மட்டும் கொண்டு வழிநடத்தும் அவள் இனிய குரல் கேட்டுக்கொண்டு மந்திரம் போடாமல் மூடித்  திறக்கும் கதவுகளைப் பார்த்துக்கொண்டு  மாறாமல் ஓயாமல் அலுவலக வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் 'லிப்ட் ' இல் இன்று தனியாய்ப்  பயணிக்கிறேன் மௌனம் ஏதோ சொல்கிறது கேட்கவில்லை!

திருட்டு 74 - படம் பார்த்துக் கவிதை சொல்

Image
சாகும் நிலையில் இருந்த நீர்த்துளிகள் அழுதன தன்னைக் காப்பாற்றச் சொல்லி ! புகைப்படம் எடுத்தேன் !

திருட்டு 73 - விஞ்ஞானிகளுக்கு ஒரு வேண்டுகோள்

Image
'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா' இளையராஜா        இசையில் பேச ஜேசுதாஸ்     குரலில் இசைக்க எப் எம் ரேடியோ      காதுகளை நெருட நண்பர்களோடு அரட்டை அடித்து இரவினைப் பகலாக்கி தேநீர் அருந்திய இரவுகள்! ஒரே தட்டில் நாய்கள் கூட முகம் சுளிக்கும் வண்ணம் தெரிந்தவர் தெரியாதவரோடு சாப்பிட்ட விடுதி உணவு ! அடுத்த நாள் நடக்கும் தேர்வை முந்திய நாள் மட்டுமே மதித்து பாடநூலின் அச்சு நகல்களைக் கூட கடன் வாங்கி படித்துக் கிழித்து தேர்ந்த செமஸ்டர் தேர்வுகள் ! இன்று ஏ டி எம் வரிசையில் நிற்க மறுக்கும் கால்கள் அன்று கக்கா போகக் கூட பக்காவாக  நின்ற தருணங்கள் ! இரவை பகலாக்கும் மொக்கைகள் ! பகலை இரவாக்கும் தூக்கங்கள் ! இதயத்தில் இருந்து மட்டுமே பூத்த நட்புகள் ! உள்ளத்தில் இருந்து மட்டுமே உதித்தப் பேச்சுக்கள் ! கல்லூரி நினைவுகள் ! இனி கனவிலும் சாத்தியப்படாத நிகழ்வுகள் ! விஞ்ஞானிகளே! சீக்கிரம் காலப் பயணம் செய்வதெப்படி என கண்டுபிடியுங்கள் ! தேநீர் வாங்கித் தருகிற

திருட்டு 72 - இந்தக் கவிதை எப்படி ?

Image
கவிதையில்                            என் கவலை மறந்தேன் கவிதைக்குள்                            என் அழுகை மறைத்தேன் கவிதையோடு                            என் பயணம் தொடர்ந்தேன் கவிதையால்                            என் வாழ்வை ரசித்தேன் கவிதையின்                            வன்மை உணர்ந்தேன் கவிதைக்கு                            என் வந்தனம் சொன்னேன் கவிதைக்கே                            என் கற்பனை கொடுத்தேன் கவிதையுடன்                           மூடம் நகைத்தேன் கவிதைக்காக                           இந்தக் கவிதை எழுதினேன் கவிதையே                            இந்தக் கவிதை எப்படி ?

திருட்டு 71 - கோலிவுட் டைரியில் என் பக்கம்

Image
கடவுளுக்கு ஒரு விண்ணப்பம் ! என் வாழ்க்கையின் இயக்கத்தை ஷங்கருக்கும் தயாரிப்பை கலைப்புலி தாணுவுக்கும் அளிக்க வேண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திற்கும் பின்னணி இசை அனிருத் இசைக்கவும் முக்கிய விழாக்களுக்கு வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரஹ்மான் பாடல் இசைக்கவும் வேண்டும் காதலிக்க காஜல் அகர்வாலும் மோதலுக்கு அரவிந்த் சாமியும் வேண்டும் வசனங்களை இறந்து போன சுஜாதா சொர்க்கத்தில் இருந்து மூளைக்கு இறக்குமதி செய்ய வேண்டும் நடிப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் . விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது பரிசீலனைக்குப் பின் கிடைத்தப் பதில் : . . . . விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது நடிகர் சங்கம் ஏற்கவில்லை !

திருட்டு 70 - அச்சுப் பிழையோ ?

Image
எமன் இப்பொழுதெல்லாம் எருமையில் பயணிப்பது இல்லையாம்! நவீன தொழில்நுட்பத்திற்கு 'அப்கிரேடு' ஆகிவிட்டான் ! சாவுச் சங்கு  ஊதிக்கொண்டே தினமும் காவு வாங்கிக்கொண்டிருக்கிறான் மும்பை ரயில்களில் ! சத்தமில்லாமல் சுத்தம் செய்துக்கொண்டிருக்கிறான் மனிதத்தை ! என்று தணியும் இந்த எம ராஜ்ஜியம் ? எமலோகத்தில் இடமில்லை என்று சொல்லும் வரையா ? தினசரி பலிகளை செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வெளியிடும் வரையா ? தினம் பத்து பேர் எமலோகத்தில் ரயில் பயணச் சீட்டுடன் சேர்கிறார்களாம்! பயணச் சீட்டில் அச்சுப் பிழையோ ?

திருட்டு 69 - நெய்தல் புதுக்கவிதை

Image
மீனின் கூற்று  கடலுக்குள்ளே சுத்திப்புட்டு - மீன் வலைக்குள்ளே  அகப்பட்டு உயிரக் கொடுத்து மாஞ்சோம்-  மனுஷ வயிறு நிரப்பச் செத்தோம் தலைவன் கூற்று பேரம் பேசி வாங்கி வந்தேன் - நல்ல காரம் போட்டுச் சமைக்கச் சொன்னேன் பெஞ்சாதி வச்ச மீன் குழம்ப - என் நெஞ்சார உண்டு அனுபவிச்சேன் தலைவி கூற்று  ஆசை மச்சான் ஆக்கிக் கேட்டு மீசை நனைக்க உண்ணும் போது சந்தோசம் நெஞ்சில் பூத்துப் போச்சு தந்தனத்  தாம் தாளம் போட்டிடுச்சு !

திருட்டு 68 - குழந்தைப் புராணம்

Image
அங்கு ஏன் கர்த்தர் சிவன் விஷ்ணு புத்தர் அல்லா எல்லாரும் வரிசையில் நிற்கிறார்கள் தெரிகிறதா  ? குழந்தைத்  தூங்குகிறது தேவ தரிசனம் செய்ய வந்திருக்கிறார்களாம்! வரிசையில் நிற்கும் அத்தனைக் கடவுள்களிடமும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் ! நிலாவை சுத்தம் செய்து கருவறையில் வைக்கிறார்களாமே ? குழந்தையே ! அதென்ன சிரிப்பை அடி வயிற்றில் அரைத்துக் குலுங்கிக்  குலுங்கிச் சிரிக்கிறாய் ? வளர்ந்துக் கெட்டவர்களைப் பார்த்து நகைப்போ ? தயவு செய்து அப்படிப் பார்க்காதே என் ஆன்மா நிர்வாணமாகிக் கூச்சப்படுகிறது!